fbpx
VICKRAMAN FRANCIS
+91 9940275018
vickramanfrancisavadi@gmail.com
BIBLE TEACHER FOR 10 PLUS YEARS

வேதாகம அறிவின் அவசியம்

ஏதோ காரணத்தினால் ஓய்வு நாளின் பிரசங்கத்தை கேட்க முடியாமல் போனவர்கள் பிரசங்கத்தை கேட்டவர்களிடம் “இன்றைக்கு பிரசங்கம் எப்படி இருந்தது?” என்று கேட்பதை நாம் அறிந்திருக்கிறோம். அதற்கான பதிலும் பலவிதங்களில் அமைந்திருக்கும். நன்றாக இருந்தது, பரவாயில்லை, புரிந்துகொள்ள கூடியதாக இல்லை, சுமாராக இருந்தது, தப்பு தப்பாக பிரசங்கித்தார்…. இவ்வாறு பதில்கள் சொல்லப்படுவதையும் நாம் காண்கிறோம்.

பிரசங்கத்தை தெளிவாகவும், பொருத்தமாகவும் பிரசங்கிக்க வேண்டியது மிகவும் அவசியமாக இருக்கிறது. எனினும் இன்றைய காலகட்டத்தில் திருச்சபைகளில்; இந்த தேவையை பூர்த்தி செய்தல் என்பதில் பின்தங்கிய நிலையே காணப்படுகிறது. Preaching with clarity and relevance is a demanding goal in today’s church. இதற்கான காரணங்களை நாம் சற்று ஆராய்வோமானால் தற்கால கிறிஸ்தவ வழிபாடுகளில் வேத வசனத்தை விளக்கி பிரசங்கிப்பது என்பதற்கு கொடுக்கப்படுகிற முக்கியத்துவம் குறைந்திருக்கிறது என்பதை நாம் கண்கூடாக காண்கிறோம். ஓரு கிறிஸ்தவ சபை வழிபாட்டில் முன்னிலை வகித்து பிரதானமாக காணப்படவேண்டியது வேத வசனத்தை விளக்கி செய்யும் பிரசங்கம். ஆனால் மேடைக் கச்சேரிகளாக மாறிவிட்ட ஆரம்ப ஆராதனை, வண்ணவிளக்குகளின் அலங்காரம் கொடுக்கப்படும் பின்னணி இசை முடித்தே ஆகவேண்டிய நிகழ்ச்சி நிரல் போன்றவற்றால் பின்தள்ளபடுகிறது பிரசங்கம். அடுத்து பிரசங்கிக்க வேண்டிய ஊழியக்காரனின் பிரதானமான நேரத்தை நிர்வாக அலுவல்கள், விசாரிப்பு ஊழியங்கள், மிகுதியாகிவிட்ட போக்குவரவுகள் ஆக்கிரமித்து கொண்டுவிட்டதால் பிரசங்கத்தை ஆயத்தமாக்க செலவிடப்பட வேண்டிய நேரம் குறைந்துபோய் பிரசங்கத்தின் தரமும் தாழ்ந்து போய்விட்டது.

இன்னும் வேடிக்கை என்னவென்றால் தற்காலத்திலே கிறிஸ்தவ சத்தியங்களை கற்றுத்தேற துணைபுரியக்கூடிய சாதனங்கள் அதிகம் பெருகியும் வேதத்தையும், அதன் வசனங்களையும் குறித்த அறியாமை தீர்க்கப்ப்டவில்லை.

வேதவசனத்தின் பகுதியை தெளிவாய் பிரசங்கித்து, கைக்கொண்டு செய்யவேண்டியது இன்னதென்று காண்பிக்காத பிரசங்கங்களால் பசியுள்ள ஆத்துமாக்களுக்கான ஆகாரம் அளிக்கப்படுவதில்லை. தனக்கு முன்பாக அமர்ந்திருக்கிறவரை திருப்திப்படுத்படுத்தி தனது கடைச்சரக்கை விற்றுவிடும் விற்பனையாளர் அல்ல ஒரு பிரசங்கி. ஓரு விற்பனையாளர் வருகிறவர் எதை விரும்புகிறாரோ அதையே கொடுப்பார். ஆனால் ஒரு பிரசங்கியார் தனக்கு முன்னால் இருப்பரின் விருப்பதை விடவும் அவரது கையில் இருக்கும் வேதாகமத்தின் தேவனின் விருப்பத்தையே வெளிப்படுத்தவேண்டும். ஆனால் இன்று பெரும்பாலான பிரசங்கங்கள் வேதவசனங்களை தங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் கருவிகளாக மாற்றிவிட்டுவிட்ட அவல நிலையாக இருக்கிறது. அதனால்தான் தரம் தாழ்ந்த பிரசங்கங்களும், மாற்றப்படாத இருதயங்களும் பெருகிவிட்டது.

இந்த நிலை மாறவேண்டுமானால் நாம் சில காரியங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

  • வேதாகமம் கற்பிக்கும் சத்தியம் என்ன? என்பதை நாம் அறிந்து கொள்வதோடு நமது சந்ததிக்கும் அதை பின்வைத்துபோகவேண்டியது நமது கடமை என்பதை உணர வேண்டும்.
  • வேதாகமத்தின் 66 புத்தகங்களின் வழியே வேதாகமத்தின் தேவன் தம்மை வெளிப்படுத்துகிறார் என்பதால் அதை கருத்தோடு ஆராயவேண்டும்.
  • அதில் சொல்லப்பட்டதை நமது விருப்பத்திற்கேற்றால்போல் விளக்கிவிடக்கூடாது.

இந்த ஆபத்தை உணர்ந்ததால்தான் பவுல் தீமோத்தேயுவுக்கான தனது இரண்டாவது நிருபத்தில் 2 தீமோ 4:3-4ல் ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு. சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும் என்று எச்சரிக்கிறார்.

மேலும் ஊழியக்காரருக்கான நிருபங்கள் என்று அழைக்கப் படுகிற நிருபங்களில் ஒரு சபையானது நற்செய்திக்கு உண்மையாகவும். நற்செய்தி அறிவிக்கும் பணியை செய்கிற சபையாகவும் காணப்படவேண்டுமானால் அங்கே வேதபூர்வமான உபதேச ஊழியம் காணப்படவேண்டும் என்றும் நாம் பார்க்கிறோம்.

  • 2தீமோ4:2ல் சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு. இது ஒரு தலைமுறையோடு முடிந்துவிடக்கூடாது.
  • 2தீமோ 2:2ல் அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி.

ஆகவே தெளிவான வேதாகமத்தின் அறிவுவை பெறும் தேவை உள்ளது.

இந்த தேவையை சிறிதளவிலாகிலும் பூர்த்தி செய்யும் முயற்சியை இந்த வலைத்தளத்தின் வாயிலாக நிறைவேற்ற விரும்பியே PREACHINGTHEWORDOFGOD.ORG என்னும் வலைத்தளத்தை ஆரம்பித்துள்ளேன்.

இதிலே கர்த்தருடைய வார்த்தையை அடிப்படையாக கொண்ட பிரசங்கங்கள், வேதபாட வகுப்புகளின் காணொளி அல்லது ஒலிவடிவம் இடம்பெறும். மேலும் வேதத்தின் புத்தகங்களை நாம் இன்னும் நன்கு புரிந்துகொண்டு படிப்பதற்கான Study Materials எனப்படும் ஆய்வுத்தாள்களும் இடம்பெற்றிருக்கும்.

இவை தேவனாகிய கர்த்தருக்குள்ளான விசுவாசத்தில் நாம் வளருவதற்கு பிரயோஜனமாய் இருக்கும்.

எனவே இவற்றை பயன்படுத்திக்கொள்ளுங்கள். மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.

கிறிஸ்துவின் பணியில்

விக்ரமன் பிரான்சிஸ்